ஜான்சி ராணி லட்சுமிபாய்…


ராணி லட்சுமி பாய் அவர்கள், இந்தியாவில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான
 ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857இல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்தவர் ராணி லட்சுமிபாய் அவர்கள்.

 ராணி லட்சுமிபாய் அவர்கள், 1828ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார்.  அவரது குழந்தைப் பருவத்தில் அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.

பள்ளிப்பருவத்திலேயே லட்சுமிபாய்  அவர்கள் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்தி சண்டை போன்ற தற்காப்புக் கலைகளை முறையாகப்   பயிற்சி மேற்கொண்டார்.

1842ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்குப் பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. 1853இல் மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு  செய்தனர். இந்தத் தத்தெடுப்பில் ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்௵ர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்தத் தத்தெடுப்பை நடத்தினார். 1853ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி, மகாராஜா கங்காரர் ராவ் மரணமடைந்தார். அந்தக் காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹெளசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின்படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்டவாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்தக் குழந்தையை சட்டவாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். மறுப்புக் கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி, லார்ட் தல்ஹெளசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள் ராணி லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டுச் செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லட்சுமிபாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ராணி மஹாலுக்குச் சென்றார்.

ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறச் சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியின் எழுச்சி இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக்கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்களோடு சேர்ந்து பெண்களுக்கும் இராணுவப் பயிற்சி அளித்தார். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து, ராணி லட்சுமிபாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, 1858ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கிப் படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அப்போது ஜான்சி ராணி அவர்கள் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லட்சுமிபாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர் 1857இல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரைச் சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஜுன் 18, 1858இல், குவாலியரில் பிரிட்டிஷ் இராணுவத்துடன் போரிட்டு ஜான்சி ராணி வீரமரணம் அடைந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிடவைத்தது.

பல தலைமுறைக்கும் இந்தியாவின் சுதந்திர போராளிகளை ஊக்கப்படுத்தி வரலாற்றில் அழியாத இடம்பிடித்தார் நம் ஜான்சி ராணி அவர்கள். இவர் ஷாஹித், பகத் சிங், வீர் சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற அனைத்து புரட்சியாளர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தவர். இவர் தான் இந்தியாவின் நிஜ ஹீரோயின்.

வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார்.

தனது கடைசி மூச்சுவரை தேசபக்தியுடன் தைரியமாகப் போராடி மறைந்த ஜான்சி ராணியை வரலாறு ஒருபோதும் மறக்காது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ