காட்டில் அதிசயங்கள்
உலக அதிசயங்கள் எத்தனை என்று கேட்டால் உடனே ‘எட்டு’ என்று சொல்லி அவற்றை தாஜ்மஹால், பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் என்று வரிசைப்படுத்திக் கூறத் தொடங்குவோம். இவை தவிர நம்நாட்டிலே, ஊருக்குள்ளே நம்மைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்ற அதிசயங்களை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா? பிலோ இருதயநாத் என்கின்ற ஓர் எழுத்தாளரை அந்தக் காலத்து வாசிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள். அஞ்சல் அலுவலகத்தில் வேலை பார்த்த இவர், தன் சொந்தச் செலவில் சுயமுயற்சியால் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களுடைய பழக்கவழக்கங்களை, நம்பிக்கைகளை அங்கேயே சென்று அவர்களோடு தங்கி அதனை கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் போன்ற பத்திரிக்கைகளில் எழுதி பதிவு செய்தார். சுற்றுப்புறச் சூழல், மானுடவியல் என்று, இன்று பலதுறைகள் வளர்ந்திருந்தாலும் தம் எழுத்தில் இவற்றைத் தொடங்கி வைத்தவர் பிலோ இருதயநாத் எனச் சொல்லலாம். பயண வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் சுமையேற்றி வரும் லாரிகளில், மாட்டு வண்டிகளில், மட்டக் குதிரைகளில் பயணம்செய்து சில நேரங்கள...