தன்னம்பிக்கை
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்” இதுபோன்ற குறட்பாக்களைத் திருக்குறளில் படிக்கும்பொழுதும், வகுப்பறையில் பாடமாக நடத்தும்பொழுதும், மேடைகளில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பேசும்போதும் ஒரு சிந்தனை ஏற்படும். 1800 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட இக்குறட்பாக்களின் மன எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் பற்றி வள்ளுவர் சிந்தித்திருப்பது பெருவியப்பைத் தருகிறது. காரணம் தற்காலத்தில் ‘எண்ணங்களால் உயர்வது எப்படி?’ தலைவனாவது எப்படி?, தனித்தன்மையை வளர்ப்பது எப்படி? என்று தனித்தனியே புத்தகம் எழுதிக்கொண்டும், வகுப்புகள் நடத்திக்கொண்டும், மனஊக்கத்தை உண்டாக்கப் பலர் முயல்வதைக் காண்கிறோம். ஆனால் திருவள்ளுவர் எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார். வினை விதி எல்லாவற்றையும் நிர்ணயிப்பது ஒரு மனிதனின் மன உறுதியே தவிர மற்றைய எல்லாம் அதற்குப் பிறகுதான் எனவும், நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் ஆற்றல், வலிமையான எண்ணங்களைக் கொண்டவர்களுக்கு வாய்க்கப்பெறும் என்பதை இத...