எம்.கே.ராதா முதல் எம்.ஆர். ராதா வரை…சி.எஸ்.ஜெயராமன்
தமிழ்த்திரையுலகில் இசைக்கு என ஒரு காலம் இருந்தது. பாடத்தெரிந்தவர்களே நடிகர்களாக, சூப்பர் ஸ்டார்களாகப் புகழ்பெற்று விளங்கினர். அதிலும் குறிப்பாக சாஸ்திரிய சங்கீதம் தெரிந்தவர்களுக்கே முன்னணியில் இடம் கிடைத்தது. திரையில் பாடகர்களே நடிகர்களானார்கள். அதனால் ஆரம்பகாலங்களில் ஒரு திரைப்படத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றதாக அந்தக்காலப் பாட்டுப்புத்தகங்கள் கூறுகின்றன. இவ்வாறு பாடத்தெரிந்த நடிகராக அறிமுகமாகிக் கதாநாயகனாகப், பின்னர் இசையமைப்பாளராக அதன்பின்னே பின்னணிப்பாடகராக மட்டும் தன்னை நிலைநிறுத்திப் புகழ்பெற்ற ஒருவர் திரு. சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் என்கின்ற சி.எஸ் ஜெயராமன் ஆவார். இவருடைய குரல் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது (unique voice) எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ சின்னப்பாவுக்குப் பிறகுத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த எம்.கே.ராதா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ...