வீரத்திற்கும்… ஞானத்திற்குமான நாள்… (மாட்டுப்பொங்கல்… திருவள்ளுவர் தினம்)
தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் நாம் இந்த நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம். முதலில் மாடுகளுக்கு நன்றி செலுத்தவேண்டிய அவசியம் என்னவென்றால் மனிதர்களோடு குடும்பத்தில் ஒரு நபராக இருப்பது கிராமங்களில் இன்றைக்கும் மாடுகள்தான். இந்த மாடுகள், காளைமாடுகளாக இருந்தால், அவை நிலம் உழுக உழவுக்கும், நீர் இறைக்க சாலுக்கும், பயணம் செய்ய வண்டிகளை இழுக்கவும் எனப் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதஇனக்குழு வேளாண்மைச் சமுதாயத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து உடனிருப்பவை. இதேபோல பசுக்கள், வீட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படை. நாம் பசுக்களுக்கு என்ன கொடுக்கிறோம்? பதிலுக்கு பசுக்கள் நமக்கு என்ன கொடுக்கின்றன? என்பதைச் சற்றே எண்ணிப்பாருங்கள் நிலத்தை அறுவடை செய்கிறோம். நெல்மணிகளை நாம் எடுத்துக்கொண்டு கழிவுப்பொருளாகிய வைக்கோலை மாட்டுக...