பிட்டுக்கு மண் சுமந்த (சிவ)பெருமான்…
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை மண் சுமந்த கூலி கொண்டு அக் கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் -திருவாசகம் - அம்மானை மதுரை அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பெருமையுடையதாகவே திகழ்ந்து வருகிறது. புராணம், இலக்கியம், வரலாறு, புதுமையை ஏற்றல் எனக் காலமாறுதல்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தகுதியுடையது இம்மதுரை. மற்றைய ஊர்களின் மண்ணுக்கும் மதுரை மண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? பிறஊர்களின், நாடுகளின், தேசங்களின் மண்ணில் இறைவன் பிறந்தார், இருந்தார், நடந்தார் என அறிந்திருக்கிறோம். ஆனால் மதுரை மண்ணைத்தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தன் தலையில் சுமந்தார் என்ற பெருமை இம்மண்ணுக்கு உண்டு...