விடுமுறையும்…. சுற்றுலாவும்….
கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குக் கொண்டாட்டமான காலம் இது. சுற்றுலா போகலாம். முழுப்பரீட்சை லீவை முழுவதும் அனுபவிக்க, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அல்லது அத்தை – மாமா வீட்டுக்குச் சென்று வரலாம். சைக்கிள் பழகலாம், நீச்சல் பழகலாம்… இவையெல்லாம் அந்தக் கால மாணவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இன்றைக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி, படிக்கிற குழந்தைகளுக்குக் கூட இது பொருந்தாது. ஏனென்றால் இப்போதிருக்கிற பெற்றோர்களும், ஆசிரியர்களும்…. ஏன் குழந்தைகளும் கூட விடுமுறையின் இனிமை பற்றிச் சிந்திக்கிறார்களா? தெரியவில்லை! நகரத்தில் விடுமுறையில் பிள்ளைகளை எங்கே விடுவது எனத் தெரியாமல் ‘ பத்து நாட்களில் அறிவாளியாகலாம்’ ‘ இருபது நாளில் எல்லோரையும் வெல்லலாம்’ என்று விளம்பரப்படுத்துகின்ற தனியார் அமைப்புகளில் பிள்ளைகளைத் திணித்து, அவர்கள் அறிவாளிகளாகப் போகும் நாட்களை எண...