சுபகிருது என்னும் நற்செய்கை
உலகெங்கும் இருக்கிற இனிய தமிழ் மக்களுக்குச் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தமிழ் வருடங்கள் பிரபவ எனத் தொடங்கி அட்சய என அறுபது ஆண்டுகளாக நிறைவுறுகின்றன.
ஒரு மனிதருடைய வாழ்க்கையில் அவர் பிறந்த தமிழ்ஆண்டு மீண்டும் வருமானால் அவருக்கு வயது 60 நிரம்பிவிட்டது என்பது பொருள். சான்றாக நான் பிறந்த தமிழாண்டு மன்மத ஆண்டு. அது மீண்டும் வந்தபோது என்னுடைய 60ஆவது வயதில் நான் என்னுடைய மனைவியோடு திருக்கடையூர் சென்று இறைவனை வணங்கி வந்தேன்.
அத்திருக்கடையூர் எம்பெருமானாகிய சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காகக் காலனாகிய எமனை வீழ்த்திய தலம். அதனால் சிவபெருமானுக்குக் காலகாலமூர்த்தி என்ற சிவநாமமும் உண்டு.
இந்த அறுபது ஆண்டுகளில் இப்போது பிறந்திருக்கும் ஆண்டின் பெயர் சுபகிருது ஆண்டு. இதற்கு நற்செய்தி, நற்செயல் என்பது பொருள் எனப் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இச் சுபகிருது ஆண்டு இதற்கு முன்னதாய் 1962இல் வந்திருக்கிறது. அப்போது இந்தியாவின் பிரதமராக பண்டித ஜவஹர்லால் நேரு இருந்திருக்கிறார். சீனப்படையெடுப்பும் இந்தியாவின் மீது நிகழ்ந்திருக்கிறது. நான் அப்போது பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வீதியெங்கும்
“சிங்கநாதன் கேட்குது சீனநாகம் ஓடுது!
என்று வீரமுழுக்கம் இட்டுக்கொண்டு இளைஞர்கள் உற்சாகமாய் வீரநடை போட்டுக்கொண்டு வருவார்கள். அப்போது என்னைப் போன்ற சிறுவர்களெல்லாம் தேசியக்கொடியைச் சட்டையில் குத்திக்கொண்டு நாட்டுக்காக உண்டியல்கள் குலுக்கிக்கொண்டு தெருவெங்கும் சென்றது எனக்கு நினைவில் இருக்கிறது.
மீண்டும் சுபகிருது ஆண்டு வந்திருக்கிறது. இவ்வாண்டு உலகஉயிர்களுக்கு நன்மை தரும் ஆண்டாக அமையவேண்டும். இயற்கைச் சீற்றமும் பெருந்தொற்றுகளும் உலக உயிர்களைச் சீண்டாமல் இருக்கவேண்டும்.
நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது கிராமங்களில் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வினைப் பார்த்திருக்கிறேன். ஊரின் நடுவே அமைந்திருக்கக்கூடிய சத்திரங்களிலோ, சாவடிகளிலோ ஊர்மக்கள் கூடுவார்கள். பங்குனி 31ஆம் தேதியாகிய அன்று பஞ்சாங்கத்தில் புதிய ஆண்டுப் பலன் வாசிக்கப்படும்.
வந்திருக்கிற மக்களுக்குச் சுண்டல், பானக்கரம் போன்றவைத் தருவார்கள். பின்னர் நள்ளிரவில் ஊர்ப்பெரியவர்கள் சிலரும், இளைஞர்களும் ஊரின் எல்லைப்புறத்தில் இருக்கும் கண்மாய்கரைக்குச் சென்று ஆகாயத்தில் நிலவின் பிறையைப் பார்ப்பார்கள். அது தேய்பிறையாக இருந்தாலும் வளர்பிறையாக இருந்தாலும் நிலவின் வளைவான கோடு எந்தப்பக்கம் உயர்ந்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டு அந்த ஆண்டின் மழை அளவைத் தீர்மானிப்பார்கள்.
இயற்கை விவசாயியாகிய பாமாயன் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘காகம் வேப்பமரத்தில் கூடுகட்டுவதை வைத்து மழையின் அளவைத் தீர்மானிப்பார்கள் நம் முன்னோர்கள். எவ்வாறு என்றால், மரத்தின் உள்பக்கத்தில் காகம் கூடுகட்டினால் அந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்றும், வெளிப்புறத்தில் கூடுகட்டினால் மழையின் அளவு குறைவாக இருக்கும் என்றும் மக்கள் அறிந்து கொள்வார்கள்’ என்றார் அவர்.
ஒரு ஆண்டின் நன்மை தீமையே மழையையும், இயற்கையையும் பொருத்துத்தான் அமையும் என்பதை நம் முன்னோர்கள் அறிவார்கள். இதுதவிர, சித்திரை முதல் நாளன்று அது வேளாண்மைக்கு உரிய காலமாக இல்லாமல் இருந்தாலும் ஊரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் ஏர்பூட்டி உழவினைத் தொடங்கி வைப்பார். அதற்கு நாள்ஏர் என்று பெயர்.
இந்த நல்ல நாளில் வீட்டில் உணவோடு வேப்பம்பூப் பச்சடியில் வெல்லம் சேர்த்து உணவில் படைப்பார்கள். வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் புளிப்பும் கலந்ததுதான் என்பதை நினைவூட்டும் விதமாக இந்த உணவுப்பொருள் படைக்கப்படும்.
ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் நம் சித்திரை வருடப்பிறப்பிற்கு 14 நாட்களுக்கு முன்பாக அவர்களுடைய வருடப்பிறப்பைக் கொண்டாடுவார்கள். அதற்கு யுகாதிப் பண்டிகை என்று பெயர். இதேபோல கேரளாவில் சித்திரை விசு என்று நமது வருடப்பிறப்பிற்கு மறுநாள் கொண்டாடுவார்கள். எவ்வாறு இருப்பினும் 12ராசிகளில் முதல் ராசியாகிய மேஷ ராசியில் (மேடம்) சூரியன் பிரவேசிக்கத் தொடங்குவதிலிருந்துதான் வருடப்பிறப்பை நம்முடைய முன்னோர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள் என அறிகிறோம்.
இத்தமிழ்ப் புதுவருட பிறப்பு நாளாகிய இன்று அனைவருக்கும் வாழ்த்துக் கூறுவோம்! நல்லன நடக்கட்டும்! நன்மைகள் தொடரட்டும்!
பசியும் பிணியும் பகையும் நீங்கி,
வசியும், வளனும் சுரக்க என வாழ்த்துக் கூறுவோம்.
சுபகிருது… சுகம் அளிக்கட்டும்!
கருத்துகள்
கருத்துரையிடுக