பேசும் கலை வளர்ப்போம்…!
‘இதைப் போய்ப் பாடமாக வைக்க வேண்டுமா?’ என்கிறோம். ஆனால், எதை எந்தச் சமயத்தில் யாரிடம்… எப்படிப் பேச வேண்டும் என்பதை இங்கு நாம் கற்றுத் தருகிறோமா?
பள்ளிக்கூடமொன்றில் ஒரு கூட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் மேடையில் உட்கார்ந்திருந்தார். எட்டாவது வகுப்பு படிக்கிற ஒரு மாணவியை வரவேற்புரை பேசச் சொன்னார்கள். மனப்பாடம் செய்து மேடையேறிய அந்தப் பெண்ணுக்கு பேச்சு மறந்து போய்விட்டது.
‘மாவட்ட ஆட்சித்தலைவரை நான் பாராட்டி… சீராட்டி… குளிப்பாட்டி…’ என்று தடுமாற்றத்துடன் பேசிக்கொண்டே போக, நெகிழ்ந்து போனார் மாவட்ட ஆட்சித்தலைவர். முன்னாலிருந்த மாணவர்கள் எல்லாம் தாங்க முடியாமல் சிரித்தார்கள். காரணம் பேச்சில் பயிற்சி இல்லாததுதான்.
செந்தமிழும் நாப்பழக்கம். பேச்சு பழகப்பழகத்தான் வரும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பேச்சுக்கலையை ஒரு பாடமாகக் குறிப்பிட்ட நேரத்தில் சொல்லிக் கொடுத்தால், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே பயன்படும்.
என்ன பேசுகிறோம் என்பதைக் காட்டிலும், என்ன பேசக்கூடாது என்பது மிகமிக முக்கியம். யாரையும் ஒருமையில் ‘நீ, வா, போ…’ என்று பேசி விடக்கூடாது. தப்பான விஷயத்தைப் பேசிவிடக் கூடாது.
உதாரணம் பாருங்கள்.
ஒரு வி.ஐ.பி.யின் பிறந்தநாள் விழாக்கூட்டம் ஒருவர் பேசவந்தார். வி.ஐ.பியைச் சுட்டிக்காட்டியபடியே ‘இந்த வயதில்தான் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கில் போட்டார்கள் என்று வரிசையாக லிஸ்ட் போட்டுவிட்டு, அதே வயதான உங்களை வாழ்த்துகிறேன்’ என்று சொன்னார். ‘தனக்கு இப்படிப்பட்ட பாராட்டா?’ என்று அசந்து போனார் அந்த வி.ஐ.பி.
பாராட்ட விரும்பியவருக்கும் எப்படிப் பேசினால் அது பாராட்டாக இருக்கும் என்பது தெரியவில்லை. திருக்குறளில் பேச்சு என்பதற்குப் பல சொற்கள் இருக்கின்றன. பயனிலாச் சொற்களைத் தவிர்க்கச் சொல்கிறது திருக்குறள்.
ஒரு திருமண மேடையில் மணமக்களை வாழ்த்த வந்த ஒருவர், ‘இல்லறம் என்பது பெரிய காடு. அதில் சிங்கம் உண்டு. ஓநாய் உண்டு. கரடி உண்டு. கருங்குரங்கு உண்டு…’ என்று லிஸ்ட் போட்டுக்கொண்டே போக வெலவெலத்துப் போனார் அந்த மணமகன். சிலர் மணமக்களைப் பார்த்து ‘கண்ணகி’ கதையை நினைத்துப்பார்’ என்கிற ரேஞ்சில் பேசுவார்கள். இதே போன்று ஏதாவது அஞ்சலிக் கூட்டத்திற்குப் போய் சிரித்த முகத்துடன் பேசக்கூடாது.
எந்தப் பேச்சிற்கும் இடம், காலம் முக்கியம்.
வின்சென்ட் சர்ச்சில் துவங்கி மேடைப்பேச்சில் வாதித்த பலர், ஆரம்பத்தில் பெரிய பேச்சாளராக வேண்டும் என்று முடிவெடுத்ததும், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்கள். தங்கள் பேச்சிற்கான விபரங்களைக் கஷ்டப்பட்டு சேகரிப்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
பார்வையாளர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. பேசும்போது சில விஷயத்தை நிதானமாகப் பேச வேண்டும்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் ஒரு படத்தில், பக்கத்து வீட்டு அம்மாள் வந்து கேட்பார். “நாளைக்கு இராமேஸ்வரத்துக்கு யார் யார் போறோம்?” உடனே என்.எஸ்.கே சொல்வார்.
“நான் உங்க புருஷன், நீங்க என் பொண்டாட்டி” என்று விரைவாகச் சொன்னதும் அதிர்ச்சியடைந்து விடுவார் அந்த அம்மா.
பிறகு நிதானமாக, ‘நான் …. உங்க புருஷன், நீங்க…. என் பொண்டாட்டி’ என்று இடைவெளி கொடுத்துச் சொன்னதும்தான் அந்தப் பொண்ணுக்கு நிம்மதி.
இசை, ஓவியம், நடிப்பு மாதிரி, பேச்சும் அற்புதமான கலை. அந்தக் கலையைத் தயக்கமில்லாமல் படிப்போம், வளர்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக