ஆடிப்பட்டம் தேடி விதை…

 



நம் பண்டையத் தமிழர்கள் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இதற்குப் பெரும்பொழுது என்று பெயர். அந்த ஆறு பருவங்கள் எவை என்றால், 


1. சித்திரை, வைகாசி - இளவேனில்

2. ஆனி, ஆடி - முதுவேனில்

3. ஆவணி, புரட்டாசி  - கார்காலம்

4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம்

5. மார்கழி, தை - முன்பனிக்காலம்

6. மாசி, பங்குனி - பின்பனிக்காலம்


என்பவையாகும்.


முதுவேனிற் காலமாகிய இந்த ஆடிமாதத்தில்தான் சூரியன் தெற்குநோக்கி நகர்கின்ற தட்சிணாயணக் காலம் வருகின்றது. இதே சூரியன் தை மாதம் தொடங்கும்போது வடக்குநோக்கி நகர்வதால் அது உத்திராயணக் காலம் என அழைக்கப்படுகிறது. 


ஆடி மாதத்தைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகள் இம்மாதத்திற்கு உண்டு. மழைக்குரிய பருவகாலம் தொடங்கவிருப்பதால் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயிகளின் பேச்சு வழக்கு. இந்த ஆடிமாதத்தில் காற்று தொடர்ந்து வீசுவதால் ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’ என்பது கிராமத்துப் பழமொழி. 


வேளாண்மை தொடங்குகின்ற காலமாதலால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும், விவசாய வேலைகள் தொடங்கி இருக்கும். இதனால்தானோ என்னவோ கடைகளில் ‘ஆடி அதிரடித் தள்ளுபடி’ என்று வாடிக்கையாளர்களைத் தேடி அழைக்கிறார்கள். 


ஆனாலும்கூட கிராமங்களில் புதிதாகத் திருமணமான மாப்பிள்ளை பெண்ணை விருந்துக்கு அழைத்து அவர்களுக்குச் சீர்கொடுப்பது வழக்கம் (அக்காலத்தில் தீபாவளி எல்லாம் கிடையாது, தீபாவளி தமிழர் பண்டிகையும் கிடையாது) இன்னும் ஒரு படி மேலேசென்று சொல்வதானால் ‘ஆடிக்கு அழைக்காத மாமனாரை தேடிப்பிடித்து அடி’ என்று வேடிக்கையாகச் சொல்வது வழக்கம். தலைஆடி, நடுஆடி, கடைஆடி என்று இந்த மூன்றில் ஒன்றில் புதுமண மக்கள் அழைக்கப்பட வேண்டும் என்பது இன்றைக்கும் கிராமத்து மரபு. 


இதே ஆடிமாதத்தில்தான் பெண்தெய்வங்களையும் சிறப்பாகப் போற்றி வழிபடுவது நம்முடைய வழக்கம்.


ஆடிப்பூரம் ஆண்டாளுக்குரிய நாள். ஆடிவெள்ளி அம்மனுக்கு உகந்த நாள். சிலகாலங்களில் இந்த ஆடி மாதத்தில் மழையில்லாமல் பஞ்சம் ஏற்படுகிறபோது அம்மனுக்காகக் கூழ்காய்ச்சி அதை உணவு கிடைக்காத ஊர்மக்களுக்கு வழங்குவதும் உண்டு. 


ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. அம்மனுக்குரிய  சேலைகள், வளையல்களை வைத்து அலங்கரித்து வழிபடுவதும் இக்காலத்தில்தான். இம்மாதத்தில்தான் பெண்களுக்குரிய வரலெட்சுமி நோன்பும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக ஆடிமாதத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. 


சோதிடத்தில்கூட ‘ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வந்திருவான்’ என்கிற நம்பிக்கை உண்டு. ‘ஆடிப்பெருக்கு’ என்றொரு பழைய திரைப்படம் கூட உண்டு. (ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடித்தது) திரைப்படப் பாடல்களில் ஆடிமாதத்தைப் பற்றிய பாடல்களாக,


ஆடியில சேதி சொல்லி…

ஆடிப்பட்டம் தேடிப்பாத்து விதைக்கணும் கண்ணையா…

ஆடிமாசக் காத்தாடிச்சு…

ஆடியில காத்தடிச்சா… ஐப்பசில மழை அடிக்கும்…


எனப் பல பாடல்களைக் கேட்டிருக்கிறோம்,..


வேளாண்மைக்கும் விருந்துக்கும் உறவுகளுக்கும் பெண்தெய்வங்களுக்குமான சிறந்த இம்மாதத்தைப் போற்றுவோம்.. வாழ்த்துவோம்…! 


கருத்துகள்

  1. அருமை ஐயா. ஆடிமாதத்தின் சிறப்புகள் அனைத்தையும் வழங்கிய தம்மை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ