மீண்டும் பிறப்பேன்… குதிராம் போஸ்…

 



பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின்பேரில் நாங்கள் எங்கள் பட்டிமன்றக் குழுவோடு கல்கத்தா சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்தபிறகு கல்கத்தாவின் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். 


அதில் முக்கியமாக எங்களைக் கவர்ந்தது விக்டோரிய மகாராணியின் அரண்மனையும் (Victoria Memorial) அதில் அமைந்திருந்த அருங்காட்சியகமும்தான் (Indian Museum). நாங்கள் அந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் பார்த்துக்கொண்டு வந்தோம். 


அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஓவியங்களில் ஒன்று என்னைச் சற்றுநேரம் திகைக்க வைத்தது. அந்த ஓவியத்திலிருந்த இளைஞனைப் பற்றி நான் பலமுறை மேடைகளில் பேசியிருக்கிறேன், பலர் பேசக் கேட்டிருக்கிறேன். 


18வயதே ஆன அந்த இளைஞர், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் நிலையை எண்ணி வருந்தி, அதற்கு மாற்று ஆயுதப்புரட்சிதான் என்று துணிந்து பல்வேறு செயல்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செய்துவந்தார். அதன்காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 


நாளை விடிந்தால் அவருக்குத் தூக்குத்தண்டனை என்ற நிலையில் அவரை ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டுமென்று அந்த இளைஞரின் தாயாரும், தாயாரின் தங்கையாகிய சிற்றன்னையும் சிறைவாசலில் இரவுமுழுக்கக் காத்திருந்தார்கள். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அதற்கு அனுமதி தரவில்லை. 


தன்னுடைய தாயாரும், சித்தியும் சிறைவாசலில் காத்திருப்பதை அறிந்த அந்த இளைஞர் மனம் வேதனைப்பட்டுக் கையில் கிடைத்த கரித்துண்டினால் அந்த சிறைச்சாலையின் சுவற்றில் ஒரு கடிதம் எழுதத் தொடங்கினார். 


“அம்மா கடைசியாக என் முகத்தை நீங்களும் சித்தியும் காணவேண்டுமென்று காத்திருக்கிறீர்கள். நானும் உங்களைப் பார்க்க விருப்பத்தோடு உள்ளேன். ஆனால் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசாங்கம் அதற்கு அனுமதி தர மறுக்கிறது. நான் இன்னும் சற்றுநேரத்தில் தூக்குமேடைக்குச் செல்லப்போகிறேன். ஆனாலும் அம்மா எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டு. நான் மீண்டும் இந்தப் புண்ணியபூமியில் பிறப்பேன். இந்தியாவில் நம் ஊரில் நம் வீட்டில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நம் சிற்றன்னையின் வயிற்றில் பிறப்பேன். பிறந்திருப்பது நான்தானா… என்று உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அந்தக் குழந்தையின் கழுத்தைத் தடவிப்பாருங்கள். தூக்குக்கயிற்றின் தடம் அதில் பதிந்திருக்கும் - குதிராம் போஸ்” என்று எழுதி வைத்துவிட்டு அந்த வீரஇளைஞன் இந்திய தேசத்தின் விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றில் தன் உயிரைத் துறந்தான். 


அந்த இளைஞனின் படத்தைத்தான் நாங்கள் அந்த அருங்காட்சியகத்தில் ஆளுயர உருவப்படமாகப் பார்த்து வணக்கம் செலுத்தினோம். இந்த வீர இளைஞனின் வரலாற்றைப் பற்றி மேலும் சில செய்திகளைக் காண்போம்…


இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் மிகவும் இளம் வயதில் நாட்டு விடுதலைக்காகத் தூக்கு மேடையில் உயிர் நீத்தத் தியாகி குதிராம் போஸ். இவர் 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டத்திலுள்ள ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். 


சிறுவயதிலேயே கீதையைப் படித்த இவர் அதில் கண்ட வாழ்க்கை முறையில் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார். நாட்டு விடுதலைக்காகத் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். 


இளவயதிலேயே அரவிந்தர், நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுக்களை இளம் வயதில் கேட்டு விடுதலைக் கனல் மூண்டது. குதிராம் போஸ் கல்லூரியில் படிக்கும்போதே அங்கு சத்தியேந்திரநாத் போஸின் வழிகாட்டுதல் கிடைத்தது. பல புரட்சி வீரர்களுடைய தொடர்பும் கிடைத்தது. 


1905ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை ஏற்பட்டபோது நாடே கொந்தளித்து எழுந்தது. இவரும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். பல காவல் நிலையங்களை குதிராமின் குழுவினர் குண்டுகளால் தாக்கினர். 


ஆங்கிலேய அரசுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தன. இவரின் தாக்குதலால் ஆங்கிலேய அரசு மிரண்டது. தம்முடைய 16ஆவது வயதில் யுகாந்தார் என்னும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்குக் குறிவைத்தார். 


இவருடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவரும் சேர்ந்து அவர் வரும் வண்டியில் குண்டு வீசிவிட்டுத் தப்பி விட்டனர். அதில் இருந்தது அவரின் மனைவி மற்றும் மகள். அவர் அந்த வண்டியில் இல்லை என்பதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம். அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை என்னும் கொள்கை கொண்டவர்கள் அவர்கள். பிரபுல்லா அங்கேயே சுட்டுக்கொண்டு இறந்துவிட வழக்கு விசாரணைக்குப் பிறகு இவருக்குத் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.


1908ஆம் ஆண்டு குதிராம் போஸைக் கைது செய்யப்பட்டபோதுதான், 18 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது. 


அதன்படி, 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி குதிராம் போசுக்கு முசாபர்பூர் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருடைய கையில் பகவத் கீதையுடன், வாய் ‘வந்தே மாதரம்’ என முழங்க அவர் உயிர் பிரிந்தது. 


மீண்டும் பிறப்பேன்… நாட்டுக்கு உழைப்பதற்காக…! என்று குதிராம் போஸின் வார்த்தைகள் இன்றைக்கும் எங்களுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 


ஒளி படைத்த கண்ணும், உறுதிகொண்ட நெஞ்சும் உள்ள இளைய பாரதத்தை,  இளைய சமுதாயத்தை போற்றுவோம்! பாராட்டுவோம்! 


ஜெய்ஹிந்த்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ