நூலகமே கோவில்….

 



‘ஒரு நூலகம் திறக்கப்படுகிறபோது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பது ஆன்றோர் வாக்கு. இது உண்மையா! என்று பலர் யோசிக்கலாம். நான் சந்தித்த ஒரு அனுபவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். 


ஒரு சுதந்திர தினத்தன்று மதுரையில் மத்திய சிறைச்சாலையில் சிறப்பு நிகழ்வுக்காக என்னைப் பட்டிமன்றம் பேச அழைத்திருந்தார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், சிறையில் இருக்கின்ற சிறைவாசிகளையே பேச்சாளர்களாகப் போட்டுக்கொள்ளலாம் என்று நான் சொன்னபோது அப்போது சிறைக்காப்பாளராக இருந்த அதிகாரி மிக்க மகிழ்ச்சியடைந்து ‘ஐயா நீங்க நடுவரா வாங்க நான் பேச்சிலே ஆர்வமுள்ள ஆறுபேரை தேர்வு பண்ணி வைக்கிறேன்’ என்றார். 


அதேபோல கூட்டம் தொடங்கியது. வரவேற்புரை முடிந்தபிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நான் முன்னுரை சொல்லியபிறகு அதில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள். ஆச்சர்யம் அவர்களைச் சிறைவாசிகள் என்றோ, ஏதோ ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்று வந்தவர்கள் என்றோ சொல்ல முடியாதபடி அவ்வளவு சிறப்பாகப் பேசினார்கள். அதில் இரண்டுபேர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களையும் பலரும் வியக்கும் வண்ணம் பாடினார்கள். 


நான் நிறைவுறையில் வாழ்க்கையில் கல்வி எவ்வளவு முக்கியம்? நூல்களை நாம் கற்கவேண்டிய அவசியம் என்ன? நூலகத்தின் பயன்கள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு அனைவரோடும் அமர்ந்து விருந்து அருந்திவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். 


சிலமாதங்கள் கழித்துப் புதிய தலைமுறை பத்திரிக்கையில் ஒருவர் பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டி இதுதான் ‘நான் காரியாபட்டிக்கு அருகேயுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் ஏற்பட்ட ஒரு சிறு கலவரத்தின் காரணமாக நான் சிறைசெல்ல நேர்ந்தது. அப்படி நான் சிறையில் இருந்தபோது பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் அங்கு வந்து பேசினார்கள். நூலகத்தின்  பெருமையைப் பற்றிச் சொன்னார்கள். 


அதன்பிறகு சில மாதங்களில் நான் விடுதலையாகி வீட்டுக்கு வந்தேன். என் மனதில் அவர் பேச்சில் சொன்ன நூலகம் பற்றிய செய்தி ஓடிக்கொண்டே இருந்தது. எங்கள் கிராமத்தில் உள்ள என் வீட்டின் முன்பகுதியைச் சிறிய நூலகமாக மாற்றி அதில் தினசரி இதழ்கள், வாரஇதழ்கள், புத்தகங்கள் என நான் வைக்க, எங்கள் ஊரின் பள்ளிப்பிள்ளைகளும் இளைஞர்களும் வந்து படிக்கத் தொடங்கினார்கள். 


இப்போது என்னுடைய வீடே புத்தகங்களால் ஒரு கோவிலாகக் காட்சியளிக்கிறது’ என்று அவர் கொடுத்திருந்த பேட்டியைப் பார்த்து வியப்படைந்து போனேன். 


நூலகம் கோவிலான வரலாறு ஆச்சர்யமான ஒன்றுதான். என்னிடத்தில்கூட பேட்டி எடுப்பவர்கள் நீங்கள் பேராசிரியராக, பேச்சாளராக, நடிகராக வராவிட்டால்; என்னவாக ஆகியிருப்பீர்கள் என்ற கேள்விக்கு நான் நூலகராகத்தான் போயிருப்பேன் எப்போதும் நூல்களைப் படித்துக்கொண்டே இருக்கலாம் என்று பதில் சொல்லியிருப்பேன். 


இப்போதும்கூட உலகின் எந்த நாட்டிற்குப் போனாலும் அந்த நாட்டின் நூலகத்திற்குச் சென்று படித்துவிட்டு வருவது என் வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்னால் இலண்டன் போயிருந்தபோது இலண்டன் நூலகத்தில் ‘மூலதனம்’ எனும் நூலினை உலகிற்குத்தந்த பொதுவுடைமைச் சித்தாந்தத்தை தன் உயர்நோக்கமாகக் கொண்ட திரு.காரல் மார்க்ஸ் அவர்கள் வழக்கமாக அமர்ந்து நூல்களைப் படிக்கும் அந்த இடத்தை அந்த நூலகத்தில் பார்த்துவிட்டு வந்தேன். 


தேசிய நூலக தினமான இன்று நூலகங்களையும் நூல்களையும் நாம் சிந்திக்கக் காரணமாக இருக்கின்ற மனிதர் திரு. எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்கள். அவரது பிறந்த நாளான இன்று நூலக தினமாக நாம் அதனைக் கொண்டாடுகிறோம். அவரைக் குறித்தும் சில செய்திகளைக் காண்போம்…

அச்சு, காட்சி, சமூக ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட இன்றைய உலகில் இவற்றைத் தாண்டி உருப்படியான நூல்களின் வாசிப்பு என்பதே இளைய தலைமுறையிடம் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. 


இந்தியாவில் பெருமளவில் நூலக இயக்கம் முறையாக வளரவும், ஒரு துறையாக நூலக இயல் உருவாகவும் காரணமாக இருந்து ‘இந்திய நூலகத் தந்தை’ என்று எல்லோராலும் பாராட்டப் பெறுபவர் சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய நூலகராக விளங்கிய சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் எனும் எஸ்.ஆர்.ரங்கநாதன். இவர் 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி சீர்காழியில் பிறந்தார். 


இந்திய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும்கூட. நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் போற்றப்படுபவர். 


நூலகவியலுக்காக இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 


மரம் அறுப்பவர்கள் மரத்தின் கோணல்மானல்களை நேராக்குவதற்கு நூலினைப் பயன்படுத்துவார்கள். அதுபோல மனக்கோணல்களைப் போக்க வேண்டுமென்றால் அதற்கும் பயன்படுவது நல்ல நூல்கள்தான். இந்தக் கருத்தை நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர் குறிப்பிடுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ