நிதானமாய்க் குளிப்பதும் தியானம்தான்…
‘அந்தக் காலத்திலே அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?’ இப்படி ஒப்பிட்டுச் சொல்லி, அலுத்துக் கொள்பவர்கள் நிறையப் பேர் நம்மிடையே இருக்கிறார்கள்.
காலமாற்றத்தை நாம் எப்படி உணர்கிறோம் என்பது முக்கியம். இரண்டாயிரம் வருஷமாக நிதானமாக நகர்ந்த வளர்ச்சியை நவீனத் தொழில் நுட்பம், கடந்த பத்திருபது ஆண்டுகளுக்குள் புகுந்து முழுக்க மாற்றியமைத்து விட்டது.
நாங்கள்கூட பட்டிமன்றத்தில் விளையாட்டாக இப்படிச் சொல்வோம்.
‘முன்னாடி மாவாட்டும்போது உரல் அப்படியே இருக்கும், குழவி சுற்றும். இப்போது குழவி அப்படியே இருக்கிறது கிரைண்டரில், உரல் அதைச் சுற்றுகிறது. இது இந்தக் காலம்.
விளம்பரங்களில்கூட இப்போது மாற்றம். முன்பு பெண்கள் அறையில் குளிக்க, ஆண்கள் காற்றாடக் குளிப்பார்கள். குறிப்பிட்ட ஒரு சோப் விளம்பரத்தில் ஆண் பாத்ரூமில் குளிக்கிறான். இன்னொரு விளம்பரத்தில் ஒரு பெண் நீர்வீழ்;ச்சியில் அட்டகாசமாகக் குளிக்கிறாள். இது இந்தக் காலம். அரசியலிலுள்ள மாற்றத்தைப் பற்றி தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பேசினார்.
முன்பு சாக்பீசால் எழுதிப் போடப்பட்ட கரும்பலகையைப் பார்த்துப் படித்த குழந்தைகள், இன்று இன்டர்நெட் திரையைப் பார்த்துப் படிக்கிறார்கள். நேரப்பயன்பாடே இப்போது மாறியிருக்கிறது. முன்பு ஆறேழு மணியானாலே ‘விளக்கு வெச்ச’ பிறகு சீக்கிரமே சாப்பிட்டுப் படுத்து விடுவார்கள். காலையில் ஐந்து மணி வாக்கில்’ கோழி கூப்பிடுகிறபோது’ எழுந்து விடுவார்கள். இப்போது இரவு தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் பார்த்து விட்டுத் தூங்க இரவு பனிரெண்டு மணி ஆகி விடுகிறது. ஆனால் எழுந்திருக்க, காலை எட்டு அல்லது ஒன்பது மணியாகி விடுகிறது. முன்பு மாலையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வந்து விளையாடுவார்கள். இப்போது டியூ~ன் மயமாகி அதிலேயே மூழ்கி விடுகிறார்கள். விவசாயத்துக்குக் காலையில் போகிற விவசாயி குளித்து முடித்துவிட்டு ‘நீட்’டாகப் போக முடியாது. காலையில் போய்விட்டுச் சாயந்திரம் குளித்து முடித்துவிட்டு, இரவு நேரத்தில்தான் சமைத்து சூடாகச் சாப்பிடுவார்கள்.
கிராமப்புறத்துக் குளியலே விN~சமாக இருக்கும். ஆற்றில் இறங்கிவிட்டால் அப்படியொரு குளியல் குளிப்பார்கள். காலை உரசோ உரசு என்று உரசி, முதுகை ஈரத்துண்டால் ராவி, ஏதோ ஏழு ஜென்மத்து அழுக்கை ஒரே நாளில் துடைக்கிற மாதிரிக் குளிப்பார்கள். ஆற்று ஓடுகாலில் குளிப்பது தனிச்சுகம். அதிலும் சனிக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் போட்டுத் தளதளவென்று மினுங்குகிற உடம்புடன் கமகமக்க கறி, மீன் வகையறாக்களை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒரு தூக்கம் போடுகிறபோது, அப்படியே சொர்க்கத்துக்குப் பக்கத்தில் போய்விட்டு வந்தமாதிரி ஒரு உணர்வு. அவர்களுக்குக் குளிப்பது ஒரு தியானம் மாதிரி. அவசரமும், பதட்டமும், ஓட்டமுமான வாழ்க்கை அவர்களுக்கில்லை. அதற்கேற்றபடி நோய்களும் அவர்களுக்கில்லை. இன்றைக்கு, காலையில் எழுந்து, காக்கா குளியல் குளித்து, அவசரமாய் ஓடித் திரும்பி வந்து, பிரஷர்கூடி – மாத்திரைகளை எண்ணி விழுங்கி, பெருமூச்சு விடும்போது கொஞ்சம் ஆற அமர நினைத்துப் பாருங்கள்.
‘எதை எதையெல்லாம் நாம் இழந்து விட்டிருக்கிறோம்?’ எதை எதையோ பெற்றிருக்கிறோம். இனிய இன்பங்களை இழந்திருக்கிறோம்.

கருத்துகள்
கருத்துரையிடுக