கண்ணன் எனும் பழைமையான கடவுள்…

 

     

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
     ஒருத்தி மகனாய் ஓளித்து வளர
    தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
    அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்…


திருமாலின் பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரமே முழுமைபெற்ற அவதாரமாகக் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் கடவுளாகப் போற்றப்படுகிறார். 

தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களும் அந்நிலங்களுக்குரிய கடவுளர்களுமாகச் சொல்லப்படும்போது 

“மாயோன் மேய காடுறை உலகமும்” என முல்லை நிலத்திற்குரிய கடவுளாகக் கண்ணபிரான் கூறப்படுகிறார். 


பன்னிரு ஆழ்வார்களும் அவர்களில் ஒருவராகிய ஆண்டாளும் மேற்குறித்த பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரத்தையே மகிழ்ந்து மகிழ்ந்து பாடுகின்றனர். 


மகாகவி பாரதியாரும் ‘கண்ணன் பாட்டு’ எனும் தனி இலக்கிய வடிவமே படைத்துக்காட்டி கண்ணனைத் தாயாய், தந்தையாய், குருவாய், அரசனாய், நண்பனாய், காதலனாய், காதலியாய், குழந்தையாய், சேவகனாய், கண்டு வணங்கிப் பாடுகின்றார். 


பிற்காலத்தில் கண்ணதாசனும் தன்னுடைய இயற்பெயரான முத்தையா என்பதனைக் கண்ணனுக்கு தாசன் எனும் பொருள்படும்படியாகக் கண்ணதாசன் என மாற்றிக்கொண்டதோடு கண்ணனுக்காக அவர் பாடிய திரைப்படப் பாடல்களும் தனிப்பாடல்களும் ஏராளம். கிருஷ்ண கானம் என மெல்லிசை மன்னர் பாடி இசையமைத்திருப்பது கண்ணபெருமானின் புகழைத்தான். 


இக்கண்ண பெருமானின் வரலாற்றைச் சற்றே காண்போம்…


யது குலத்து அரசனாகிய கம்சன் துவாரகையை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் சகோதரியான தேவகிக்குத் தன் நண்பராகிய வசுதேவரை மணம் செய்து வைத்து அவர்களை மணமக்களாக தேரிலே அழைத்துக்கொண்டு அத்தேரினை அவனே ஓட்டியும் வந்தான். அப்போது ஆகாயத்தில் ஓர் அசரீரி கேட்டது,


“ஏ! கம்சனே இதோ இந்தத் தேவகியின் வயிற்றில் பிறக்கின்ற எட்டாவது குழந்தையே உனக்கு எமனாவான்’ என்று அந்தக் குரல் சொல்ல அதைக் கேட்டுக் கோபங்கொண்ட கம்சன் தேவகியையும் வசுதேவரையும் வெட்டி வீழ்த்தப் போனானாம். அப்போது வசுதேவர் ‘கம்சனே! அசரீரியின் குரல்கேட்டு கொலைசெய்யாதே. எங்களுக்கு இப்போதுதானே திருமணம் ஆகியிருக்கிறது எங்களை வாழ விடு’ என்று கேட்க அவர்கள் இருவரையும் சிறையில்  போட்டுப் பூட்டினான் கம்சன். 


அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் ஓடிச்சென்று அந்தக் குழந்தையைக் கொன்றான். அவர்கள் எவ்வளவு கதறியும் கேட்கவில்லை. அத்தோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பிறந்த குழந்தைகளையும் கொல்லத் தொடங்கினான். ஏழாவது குழந்தை கர்ப்பத்திலேயே மாற்றி வைக்கப்பட்டது. ஆயர்பாடியில் வாழ்ந்த நந்தகோபனின் இரு மனைவியரில் ஒருத்தியின் வயிற்றில் தேவகியின் குழந்தை வளர்ந்தது. அக்குழந்தையே பலராமன். 


பின்னர் எட்டாவது குழந்தையாகிய கண்ணபரமாத்மா ஆவணிமாதத்தில் தேய்பிறை அஷ்டமியில் நள்ளிரவில் கொட்டுகின்ற மழையில் சிறைச்சாலையில் தேவகியின் வயிற்றில் தோன்றினார். பிறந்தவுடன் அவர் தன் தாய் தந்தையரைப் பார்த்துச் சொன்ன வார்த்தை இதுதான்.. 


‘என்னை உடனடியாக ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு யசோதைக்குப் பிறந்த பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு என்னை அங்கே விட்டுவிடுங்கள்’ என்று கூறினார். 


அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. குழந்தை ஒளி வடிவத்தில் இருந்ததால் இருள் விலகிற்று. விலங்குகள் கழன்றன. சிறைக்கதவு திறந்தது. கொட்டும் மழையில் குழந்தையை கூடையில் வைத்து அக்கூடையை தலையில் வைத்து வசுதேவர் புறப்பட, திருமாலின் பஞ்சனையாகிய ஆதிசேஷன் குடைபிடிக்க யமுனை ஆற்றிலே நீந்திச்சென்று கண்ணன் சொன்னபடி அவரை இங்கே விட்டுவிட்டு அந்தக் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார் வசுதேவர். 


சிறைக்குள் வந்த குழந்தை அழுத சத்தம்கேட்டு கம்சன் எட்டாவது குழந்தை பிறந்ததென்று அதைக் கொல்ல ஓடிவர, அது பெண்குழந்தை என்றும் பாராமல் அக்குழந்தையின் கால்களைப் பிடித்துத் தரையில் அடிக்க முயல, அக்குழந்தை விண்ணில் கிளம்பி மகா காளியாக மாற்றம் எடுத்து, ‘ஏ! கம்சனே நீ என் காலைப் பிடித்ததால் நான் உன்னைக் கொல்லவில்லை. உன்னைக் கொல்பவன் ஆயர்பாடியில் வளர்கிறான்’ என்று சொல்லிவிட்டு மறைந்தது. 


பின்னர் கம்சன் ஆயர்பாடியில் வளரும் பலராமனையும், கண்ணனையும் கொல்ல பலமுறை முயன்று முடிவில் அவர்கள் துவாரகைக்கு வந்து தங்களின் தாய்மாமனாகிய கம்சனைக் கொன்று தாய் தந்தையரை விடுவித்து துவாரகையை ஆளத்தொடங்குகிறார்கள். இதுவே கண்ணன் கதை!


கண்ணன் பிறந்த இந்த நாளில் நன்மைகள் பெருக, தீமைகள் விலக இறைவன் பூமிக்கு வந்த நன்னாளாகக் கொண்டாடுவோம். 


அனைத்தும் கண்ணன் செயல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ