பிட்டுக்கு மண் சுமந்த (சிவ)பெருமான்…
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய்
-திருவாசகம் - அம்மானை
மதுரை அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பெருமையுடையதாகவே திகழ்ந்து வருகிறது. புராணம், இலக்கியம், வரலாறு, புதுமையை ஏற்றல் எனக் காலமாறுதல்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தகுதியுடையது இம்மதுரை.
மற்றைய ஊர்களின் மண்ணுக்கும் மதுரை மண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? பிறஊர்களின், நாடுகளின், தேசங்களின் மண்ணில் இறைவன் பிறந்தார், இருந்தார், நடந்தார் என அறிந்திருக்கிறோம். ஆனால் மதுரை மண்ணைத்தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தன் தலையில் சுமந்தார் என்ற பெருமை இம்மண்ணுக்கு உண்டு.
திருவிளையாடல் புராணத்தில் வருகின்ற 64திருவிளையாடல்களில் பெரும்பான்மையான திருவிளையாடல்கள் நிகழ்ந்தது இம் மாமதுரையில்தான் எனச் சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் இலக்கியமும், கல்லாடர், பெரும்பற்றப் புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் போன்றோரால் இயற்றப்பட்ட திருவிளையாடல் புராணங்களிலும் கூறப்பட்டிருப்பதை அறிகிறோம்.
எல்லா உயிர்களுக்கும் இரக்கம் காட்டும் இறைவன் ஆதரவற்ற ஏழைகளைக் காக்க, தானே மனிதவடிவில் வருவான் என்பதைத் திருவிளையாடல் கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றுதான் சிவபெருமான் கூலியாளாக வடிவமெடுத்து வந்திக் கிழவிக்காக மண்சுமந்து பாண்டிய மன்னனிடத்தில் பிரம்படிபட்ட வரலாறு. இவ்வரலாறு பற்றி விரிவாகக் காண்போம்…
ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும். எட்டாம் நாளான அன்று நரிகளைப் பரிகளாக்கிய லீலை நடைபெறும். இன்றைய நாளில் பிட்டுத்திருவிழா மதுரை புட்டுத்தோப்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
இதனைத் தொடர்ந்து மதுரை புட்டுத்தோப்பில் சுந்தரேஸ்வரர் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் காட்சிதர, இந்த விழாவானது வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் புடைசூழ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலுக்கு எழுந்தருளுவார். இந்தப் புட்டுத்திருவிழாவில் பங்கேற்கத் திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியசுவாமி எழுந்தருளுவார். இத்திருவிழாவைக் காணவரும் பக்தர்களுக்குப் பிட்டு பிரசாதமாக வழங்கப்பெறும்.
தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல்தான் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’. இந்நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த படலம் வைகை ஆற்றங்கரையில்தான் நடைபெற்றது. வைகைநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை நகரை அலைக்கழித்தது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் வந்து கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென அரிமர்த்தன பாண்டியன் உத்தரவிட்டான். இச்செய்தியானது மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது.
மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். தான் செய்த முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து விட்டு, அதைச் சிவனடியார் ஒருவருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். அதன்பின்னர் அவிக்கும் பிட்டை விற்க ஆரம்பிப்பாள்.
இந்தச் சூழலில் வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. வயதான காலத்தில் தன்னால் கரையை அடைக்க முடியாது என்பதால் கூலிக்கு ஆள் தேடினாள். இதைஅறிந்த சிவபெருமான் மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். வந்தியின் முன் வந்து நின்றவர், ‘பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்குப் பதிலாக வேலை செய்கிறேன். அதற்குக் கூலியாக நீ அவிக்கும் பிட்டை மட்டும் கொடுத்தால் போதும்’ என்று கூறினார். பாட்டியும் ஒத்துக்கொண்டாள்.
சிவபெருமான் தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண்வெட்டினார். அதன்பிறகு, ஒழுங்காக பணிசெய்யாமல், மண்ணை வெட்டுவதுபோலவும், பாரம் தாங்காமல் அதேஇடத்தில் கூடையை கீழே தவறவிட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்து, அயர்ந்து தூங்கிவிட்டார்.
அப்பொழுது பணிகளைப் பார்வையிட வந்த அரிமர்த்தன பாண்டிய மன்னன், ஒரு மரத்துக்கு அடியில் தூங்கும் சிவபெருமானைப் பார்த்தார். அங்கு கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கி, ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆனால் மன்னன் ஆவென அலறினான். மன்னன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கியவர் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. மேலும் ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் வற்றிவிட்டது கண்டு வியப்படைந்து கூலியாளாய் வந்தவரைப் பார்த்தபோது, அவர் மறைந்து விட்டார். அப்போதுதான் கூலியாளாய் வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்தார்.
இந்த அதிசயம் நிகழக் காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்றபோது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு இறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம் ‘தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டுள்ளார். தாங்கள் எங்களுடன் வாருங்கள்’ என்று வந்தியை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
இந்த வரலாற்றை ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடமாக நடத்தியபோது ஒரு மாணவன் ஆசிரியரைப் பார்த்துச், ‘சிவபெருமான் மீது பட்ட அடி உலக உயிர்கள் மீதெல்லாம் பட்டது என்று சொன்னீர்களே ஐயா! சிவபெருமான் உண்ட பிட்டு என்னும் இனிய உணவு எல்லோர் வயிற்றுக்கும் போய்ச் சேர்ந்ததா?’ என்று கேட்டானாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக