கிராமத்து மனிதர்கள்
எங்கள் கிராமத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே, இந்த வீரம்மாவைப் பார்த்திருக்கிறேன். ‘ விளக்குமாற்று வீரம்மாள்’ என்ற பெயர் சுற்றுப்பட்டிகளில்கூடப் பிரபலம். அநேகமாக இவள் பிறவியிலேயே விதவை என்பது ஒரு சாரார் கருத்து. பெரும்பாலும் சடையாகவும் இல்லாமல், மொட்டையாகவும் இல்லாமல் ஒரு மாதிரியாகத் தொங்கும் முடி. அதைப் பார்த்தாலே ‘சடாமுடி’ நினைவிற்கு வரும். ஐம்பது வயதைத் தாண்டிய உடம்பு. தான் எதையும் சட்டை செய்யாதவள் என்பதைக் காட்டுவதுபோலச் சட்டையே போடாத உடம்பு. சேலையைக் கட்டி அதனையும் இடுப்பில் இழுத்துச் சொருகி, ஆடுகால் தசை ‘தடங் தடங்’ என்று அதிர, வலது கையில் விளக்குமாற்றையும், இடதுகையில் வாளியும் பிடித்துச் சிலர் வீட்டு வாசலைப் பெருக்குபவள். பெரும்பாலும் காலையில் மட்டுமே காட்சி தருபவள். ஒருநாள் காலையில் பார்க்காவிட்டால் இனி அடுத்த நாள் காலையில்தான் ப...