கிராமப் பேருந்து
சான்றோர்களே! நீங்கள் அனைவரும் டவுன் பஸ்ஸைப் பார்த்து, அதில் பிரயாணம் செய்து சுகப்பட்டிருப்பீர்கள். ஆதலால் அதுபற்றி, அதன் உருவம் பற்றி அதிகமாக இங்கு பேசப்படவில்லை. முதன்முதலில் இந்தியாவில் இரயிலைப் பார்த்தவர்கள் பலர் இப்போது இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பஸ்ஸைக் கண்டவர்கள் இருக்கிறார்கள். நான் எங்கள் ஊருக்கு முதன்முதலில் வந்த டவுன் பஸ்ஸையும், பிறகு அது கிராமிய பஸ் ஆனதையும் சொல்லப்போகிறேன். அதுதவிர டவுன் பஸ்ஸில் செய்யும் பிரயாணம் நாளுக்கு நாள் வசதிக் குறைவில் அடைந்து வரும் முன்னேற்றத்தையும் நாம் காணப்போகிறோம். முதலில் 1. முதல் டவுன் பஸ் அனுபவம், 2. டவுன் பஸ்களில் ஏறும் முறைகள், 3. உட்கார இடம் பிடிக்கும் முறை, 4. பஸ்ஸில் தூக்கமும், அதன் பயனும், 5. பல முக்கியத் தலங்களில் டவுன் பஸ்ஸின் அற்புதங்கள் ஆகியவை பற்றி இங்கு பார்த்துக்கொள்ளலாம். பயணச்சீட்டு (டிக்கெட்) வாங்காமல...