டிஸ்கோ…1982…
உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. அடுத்தது முடிவெட்டுவது, அதாவது வெட்டிக்கொள்வது. குறிப்பாக முடிவெட்டிக்கொள்வதென்றால் மரண பயம்தான். இதற்குக் காரணம் சொல்ல வேண்டுமென்றால் சில பூர்வ புண்ணியக் கதைகளை நீங்கள் தெரிந்துதான் ஆகவேண்டும். சிறுவயதில் நான் முடிவெட்டிக் கொள்ளத் தனியாகச் செல்லக்கூடாது. உலகமே மாறினாலும் என் அப்பா கம்பீரமாக உடன் வந்தே தீருவார். எங்களுக்கு முடிவெட்ட ஒரு ஆஸ்தான முடித்திருத்தாளர் இருந்தார். அவரைத் தவிர யாரிடமும் நான் முடிவெட்டக்கூடாது. பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டிற்கே வந்துவிடுவார். ‘சாமி கிராப் வெட்டி விடட்டுமா?’ என்று அன்பாகக் கேட்டபடி எனக்கு முடிவெட்டத் தொடங்குவார், என் அப்பாவின் முன்னால். அந்த முறையை நினைத்தால் உடம்பே நடுங்கும். எல்லா முடிகளையும் ஒன்றாக்கி ஒரு கையில் கொத்தாகப் பிடித்து மறுகையில் கத்தரியால் வெட்டிச் சாய்ப்பார். பின் மண்டையில் மிஷின் ஒன்றால் ஒரு தேய்… தேய்ப்பார். முடிந்தது, அப்போது பார்த்தால் அநேகமாக ஏதாவது ஒரு ஆதினத்தின் இளைய சந்நிதானம் போல இருப்பேன். ஒரே கோபமும், அழுகையுமாய் வரும், ஒன்ற...