பம்மல் முதல் கோமல் வரை
தமிழ்த் திரையுலகில், இலக்கிய உலகில், எழுத்துலகில் என்று சுடர்விட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்;. அவர்களில் ஒருவர்தான் திரு. கோமல் சுவாமிநாதன் . ஒரு திரைப்படம் ஒரு சிறுகதை, ஒரு மேடைப்பேச்சு, ஒரு கவிதை, ஒரு நாவல் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்படுத்தும். சான்றாகத், ‘ தண்ணீர் தண்ணீர்’ என்ற படம் நாடக எழுத்தாளர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்களால் எழுதப்பட்டுப் பன்முறை மேடைநாடகமாக வெற்றிபெற்ற பெருமையை உடையது. அந்த நாடகத்தை அப்படியே வாங்கி, திரைக்கதை மட்டும் எழுதி, வசனத்தைக் கோமல் அவர்களை எழுதவைத்துத் தேசிய விருது பெறும் படமாக மாற்றிக் காட்டினார் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள். இந்தப் படத்தில் ஒரு ஊரே தேர்தலில் வாக்களிக்க மறுத்தால் அரசாங்கமே அவர்களை நோக்கி வரும் என்பதைப் படத்தில் மிகச் சிறப்பான காட்சியாக வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லாத் தேவைகளுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்காமல் நமக்கு நாமே என்பதை மனதில்கொண்டு ஊர் கூடித் தேர் இழுத்தால் தண்ணீர் ஏரியே ஊருக்குள் வரும் எ...