இப்போது இது அவசியம்…. அவசரம்….
பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி மாணவ மாணவியரும் பள்ளி, கல்லூரி செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மீண்டும் கல்விக்கான எந்திரம் சுழலத் தொடங்கிவிட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் சமீப காலங்களில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆசிரியர்கள் குறிப்பாகப் பெண் ஆசிரியைகள் மாணவர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பதும் மாணவ மாணவியர்களுள் சிலர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கின்ற செய்திகளும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன. மாதா பிதா குரு தெய்வம் எனச் சொல்லும்போது, ஆசிரியர் தந்தைக்கு அடுத்தபடியாகவும் தெய்வத்திற்கு இணையாகவும் போற்றப்படக்கூடிய பெருமையை உடையவர் என்பது நம்முடைய மரபு. கல்வியின் பெருமையை ஆசிரியர் இல்லாமல் நாம் அறிந்துகொள்ள முடியாது. ...