செம்மொழி நாயகர்…பரிதிமாற் கலைஞர்…!
மதுரை மாநகரம் ஈராயிரம் ஆண்டுப் பழைமையோடும் குன்றாத பெருமையோடும் இன்றும் திகழ்ந்து வருகிறது. முச்சங்கங்கள் தோன்றியது இம்மதுரையில்தான். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் போன்ற சங்கப்புலவர்கள் வாழ்ந்ததும் இம்மதுரையில்தான். இதன் தொடர்ச்சியை இருபத்தியோராம் நூற்றாண்டிலும் காண்கிறோம். மதுரையின் பெருமையை உலகறியச் செய்ததோடு தமிழ் உயர்தனிச் செம்மொழிதான் என முதலில் முழக்கமிட்டவர் பரிதிமாற் கலைஞர். இவர் 1870ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள விளாச்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தம் தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரைச் சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். (தற்போது மதுரைக் கல்லூரி) உயர்தனிச் செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர். பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கிலமொழிக்கு தமிழர்கள் அடிபணியக்கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் ஆவார். பரிதிமாற் கலைஞர் ஒரு தமிழாசிர...