நூலகமே கோவில்….
‘ஒரு நூலகம் திறக்கப்படுகிறபோது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பது ஆன்றோர் வாக்கு. இது உண்மையா! என்று பலர் யோசிக்கலாம். நான் சந்தித்த ஒரு அனுபவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு சுதந்திர தினத்தன்று மதுரையில் மத்திய சிறைச்சாலையில் சிறப்பு நிகழ்வுக்காக என்னைப் பட்டிமன்றம் பேச அழைத்திருந்தார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், சிறையில் இருக்கின்ற சிறைவாசிகளையே பேச்சாளர்களாகப் போட்டுக்கொள்ளலாம் என்று நான் சொன்னபோது அப்போது சிறைக்காப்பாளராக இருந்த அதிகாரி மிக்க மகிழ்ச்சியடைந்து ‘ஐயா நீங்க நடுவரா வாங்க நான் பேச்சிலே ஆர்வமுள்ள ஆறுபேரை தேர்வு பண்ணி வைக்கிறேன்’ என்றார். அதேபோல கூட்டம் தொடங்கியது. வரவேற்புரை முடிந்தபிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நான் முன்னுரை சொல்லியபிறகு அதில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள். ஆச்சர்யம் அவர்களைச் சிறைவாசிகள் என்றோ, ஏதோ ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்று வந்தவர்கள் என்றோ சொல்ல முடியாதபடி அவ்வளவு சிறப்பாகப் பேசினார்கள். அதில் இரண்டுபேர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களையும் பலரும் வியக்கும் வண்ணம் ப...